இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்!

Print lankayarl.com in இந்தியா

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு குழு மீனவர்களின் படகையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதில் மாயமான ஒரு மீனவரின் நிலை என்ன? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை திருப்பித் தர இலங்கை அரசு மறுத்து வருகிறது.

சிங்களப் படையினரின் அத்துமீறல்கள் நீடித்தால், தூத்துக்குடி முதல் நாகப்பட்டினம் வரையிலான கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்க நேரிடும். எனவே, கைது செய்யப்பட்ட 27 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவித்து சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் மூழ்கி மாயமான மீனவர் மாரிச்சாமியை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.